புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட ரமணன் மயில்வாகனம் விடுதலை!

Written By piramyd on Tuesday, May 15, 2012 | 3:55 AM


விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கைத் தமிழரும், கனடிய பிரஜையுமான  ரமணன் மயில்வாகனம் அமெரிக்க நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியுயோர்க் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் ரமணன் மயில்வாகனம் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும் என அமெரிக்காவின் நீதித்துறை திணைக்களம்  கோரியிருந்தது.

இருந்தபோதிலும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு மனந்திருந்தியுள்ள தமது தரப்பு வாதியான ரமணன் மயில்வாகனம் என்பவரை விடுதலை செய்யுமாறு அவரது வழக்கறிஞர் தமது வாதத்தை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ரமணன் மயில்வாகனம் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தை அவரின் தண்டனையாக கருதி விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட கனடியரான ரமணன் மயில்வாகனம் மீண்டும் கனடா வருவதற்கு சட்டச்சிக்கல்களை எதிர்கொள்வாரா என்பது குறித்து தெளிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான கருணாகரன் கந்தசாமி என்ற அமெரிக்க பிரஜையும் கடந்த வாரம் நியுயோர்க் நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிருந்த காலத்தை தண்டனையாகக் கருதி விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.